வேப்பஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வங்கவனம். அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவதாக என்னுடைய அம்மாவின் சித்திகளில் ஒருவரான ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வங்கவனத்தின் முதல் மனைவிக்கு பிறந்தவர் காமாட்சி. தாய், தந்தை இல்லாமல் தான் வளர்வதை போல, தாயில்லாமல் வளரும் காமாட்சி மீது, என்னுடை அம்மாவுக்கு பரிவும், பாசமும் அதிகம்.
சிறு வயதிலிருந்தே தங்கையாக, தோழியாக இருந்த காமாட்சி, பெரியவள் ஆனதும், தனது, கணவரின் தம்பி அரிகிருஷ்ணனுக்கு மணமுடிக்க விரும்பினார். இதை ஆலோசனையாக என்னுடைய தந்தையிடம் தெரிவித்த போது, அவரும் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், எங்கள் ஊரில் வசித்த என்னுடைய அம்மாவின் சித்திகளில் ஒருவரான, வள்ளியம்மையின் மகள் மருதம்பாள் என்பவரை, என்னுடைய சித்தப்பா திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
இந்த தகவலை தனது அண்ணனிடம் சொல்ல தயங்கிய என் சித்தப்பா, அவருடைய சித்தியை திருமணம் செய்து கொண்ட, மாரிநகரி ராமநாதன் என்பவரிடம் சென்று தெரிவித்திருக்கிறார்.
எங்களில் மூத்தவர் ராமநாதன். அவருடைய வார்த்தைக்கு என்னுடைய தந்தை மதிப்பளிப்பார் என்பது ஒன்று. இரண்டாவது, ராமாநாதனிடம் மனியம் வேலை பார்ப்பவர் வடிவேலு. அவருடைய மகள்தான் மருதாம்பாள்.
முதலில் வடிவேலுவிடம் இது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார் ராமநாதன். அண்ணனை சார்ந்து இருக்கும் அவரை நம்பி எப்படி பெண் கொடுப்பது என்று தயங்கி இருக்கிறார் வடிவேலு.
பிறகு, இருக்க இடமும், சாகுபடி செய்து கொள்ள மூன்று மா நிலமும் அவன் பெயரில் எழுதி வைக்கிறேன் என்று கூறி, அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார் ராமநாதன்.
பிறகு என்னுடைய தந்தையை அழைத்து விபரத்தை கூறியதும், அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. தான் ஒரு முடிவு செய்தால், தம்பி ஒரு முடிவு எடுத்திருக்கிறானே என்று ஆத்திரம் தலைக்கு ஏறியது. இருப்பினும் குடும்பத்தில் மூத்தவர் ராமநாதான் முடிவு செய்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத என்னுடைய தந்தை, உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
சித்தப்பா அவர் விரும்பிய மருதம்பாளை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு என் தந்தை செல்லவில்லை. மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை என் தந்தையால் நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருந்தது.
ஆத்திரத்தில் அப்போது அவர் எடுத்த அந்த முடிவு, அவரை பலமுறை வருத்தமடைய வைத்திருக்கிறது. தாயாகவும், தந்தையாகவும் நின்று செய்ய வேண்டிய பொறுப்பை, ராமநாதன் இருக்கிறாரே என்று கண்டு கொள்ளாமல் விட்டது, எவ்வளவு பெரிய குறை என்று வேதனைப் பட்டிருக்கிறார்.
அந்த குறையை எப்போது போக்கிக் கொள்வது என்று காத்திருந்தவருக்கு மறு வருடமே அதற்கு பலன் கிடைத்தது. ஆம், என் சித்தப்பாவுக்கு கௌசல்யா என்கிற அழகான பெண் குழந்தை பிறந்தார். அந்த குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தவர், அதன் பிஞ்சு கால்களால் தன்னை மன்னிக்கும் படி மூளையை நோக்கி உதைக்க வைத்திருக்கிறார்.
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று நம்பியவர் அவர். அந்த தெய்வம் மன்னித்ததாக நினைத்துக் கொண்டார் அவர்.
No comments:
Post a Comment