தனக்கு எல்லாமுமாக இருந்த தன்னுடைய மனைவி ராஜாமணி இறந்தும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான, அவரது கணவர் நடேசன், வாழ்க்கை மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்தார். மனைவி இல்லாமல் வாழ்வது அவருக்கு தேவை இல்லாத வாழ்க்கையாக தோன்றி இருக்கிறது.
அதனால், பிடிப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். முன்பு போல வெளிநாட்டுக்கு சென்று பணம் தேட ஆர்வமோ, சம்பாதித்து போடா வேண்டும் என்கிற அக்கரையோ, பிள்ளைகள் மீது கவலையோ இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார்.
காடு எப்போது கூப்பிடும். வீடு எப்போது அனுப்பி வைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன், எதிலும் ஈடுபாடு இல்லாதவராக படுக்கையில் விழுந்திருக்கிறார்.
தான் உயிரோடு இருந்தவரை தான் பெற்ற தங்க மகன்களை வேலைக்கு செல்ல தடை போட்ட, ராஜாமணி, தன் இறப்புக்கு பிறகு வேலை தேட வேண்டிய கட்டாயத்துக்கு காலம் தள்ளிவிட்டதை அறிய அவர் வாய்ப்பில்லாமல் போனது.
ரயில்வே வேலைக்கு ஆள் எடுத்த போது, தன்னை அழைக்க வந்த நண்பனை, ‘’என் புள்ளையையா வேலைக்கு கூபிடுறே’’ என்று தாய் துரத்தி, விரட்டி அடித்த போதும், வெளிநாட்டில் வேலை செய்ய சித்தப்பா மகன் வைரப்பன் கடிதம் அனுப்பி அழைத்த போதும், தாய் சொல்லை கேட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த என் தந்தை கோபாலகிருஷ்ணன், குடும்பத்தை காப்பாற்ற வேண்டி கட்டாயத்திற்கு ஆளானார்.
மகன்கள் கோவிந்தராஜ், செல்லப்பா இருவருடன் வசிக்கும் பெரிய அக்காள் வைரம், தம்பி அரிகிருஷ்ணன், உடல்நலத்தால் முடங்கிப் போன தந்தை நடேசன் ஆகியோரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அக்கறையும் அவருக்கு இருந்தது.
எடையூரில் பெரிய மிராசுதாரராக இருந்த கே.பி. அவர்களிடம் சிறிது காலமும், குமாரபுரம் நாராயணன், தியாகராஜன், ஜெகதீசன் ஆகியோரின் குடும்பத்தில் சில காலமும், மணியார் வேலை பார்த்திருக்கிறார்.
அதன் பிறகு, வடசங்கந்தி தீனதயாளு ராஜு அவர்களிடம் மணியார் வேலைக்கு சேர்ந்தவர், கடைசி காலம் வரை அங்குதான் இருந்தார்.
தன்னுடைய தாயின் நிலத்தை ஒழுங்காக சாகுபடி செய்து காப்பாற்ற நினைத்திடாத என்னுடைய தந்தை கோபால கிருஷ்ணன், இரவு பகலாக காட்டிலும், வயல் வெளிகளிலும் கிடந்து உழைத்து, தன்னை நம்பிய தீனதயாளு ராஜூவுக்காக உண்மையாக வாழ்ந்தார். அவரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருந்தார்.
‘’என்னுடை நிலம் எங்கே, எவ்வளவு இருக்கு. சாகுபடிக்கு எவ்வளவு செலவாச்சு, என்ன கண்டு முதல்... இது எதுவும் எனக்கு தெரியாதுப்பா... எல்லா கணக்கும் உங்க அப்பாவுக்குத்தான் தெரியும்.. ‘’ என்று தீனதயாளு ராஜு பெரியப்பா, என்னுடைய தந்தைையைப் பற்றி பெருமையாக கூறுவார்.
தான் இருந்தவரை, அவரை வயல் வெளிக்கு வர அனுமதித்தில்லை என் தந்தை.
அதே போல அவருடைய பனிரெண்டு பிள்ளைகளும், என் தந்தையின் நாணயம் பற்றி குறை கண்டதில்லை. இப்பவும் பார்க்கும் போது என்னுடைய தந்தையைப் பற்றி பெருமையாகத்தான் கூறுவார்கள்.
சீறி வரும் களையாக, கெத்தாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளமாக உள்ளன.
No comments:
Post a Comment