Friday, August 4, 2017

13. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட என்னுடைய தந்தை.

VADASANGANTHI VINAYAGAR
சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என் தந்தை.

தகடூர் கிராமத்தில் அமைந்துள்ள வைரவர், குல தெய்வம். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வணங்கி வருபவர், மாதத்திற்கு ஒரு முறை எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவார்.

எட்டுக்குடி முருகன் மீது உள்ள பக்தியால் என்னுடை அண்ணனுக்கு சண்முகசுந்தரம், எனக்கு பாலசுப்பிரமணியன், தம்பிக்கு நமசிவாயம், அக்காள் மகனுக்கு குமரவேலன் என் பெயர் வைத்தார்.

வடசங்கந்தி கிராமத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன், வீரமாகாளியம்மன், ஆகிய கடவுளர்களிடம் உரிமையுடன் பேசுவார் பழகுவார். அவர்கள் மீது நம்பிக்கை அதிகம்.

அவர் உயிரோடு இருந்தவரை சிவன் கோவிலில் இருக்கும் முருகனுக்கு கார்த்திகை திருநாளில் அர்சனைக்கும், அபிஷேகத்திற்கு கொடுப்பார்.
குளத்தில் குளித்துவிட்டு வரும் போதே வெள்ளந்தாங்கி விநாயகரை வணங்குவார்.

கோவில் திருவிழா என்றால், சிவன்ராத்திரி அன்று மாரியம்மன் கோவிலுக்கு, விநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து செல்வது வழக்கம்.

அன்று கிராமமே பக்தியோடு திரண்டு நிற்கும், வடசங்கந்தி கிராமத்தில் வசித்து வெளி ஊரில் இருப்பவர்கள், வடசங்கந்தி கிராமத்தில் பெண் கொடுத்தவர்கள், பெண் எடுத்தவர்கள் என பல விருந்தினர் அந்த விழாவில் பங்கேற்பார்கள்.

THAKATUR BAIRAVAR
இரவு ஒன்பது மணிக்கு விநாயகர் கோவில் வாசலில் அமர்ந்து கரகம் ஜோடிப்பார்கள். என்னுடைய தந்தைக்கு சாமி அருள் வரவழைத்து, அவர் குரல் கொடுத்த பிறகு, என்னுடைய அத்தை மகன் ஜானகிராமனுக்கு சாமி வரும்.
அவர் அருள் வந்து ஆடுவார். அவரை பிடித்து மடக்கி, அவருக்கு சாமி உடை அணிந்து மாலைகள் அணிவிப்பார்கள். என் தந்தை கரகத்தை தூக்கி அவர் தலை மீது வைப்பார்.

கரகத்திற்கு முன்பு பறையடித்தபடி சிலர் நடப்பார்கள். கரகத்திற்கு வழி அமைத்து கொடுத்து அழைத்து செல்வது போல, வடிவேலு சாம்பான் கடவுளாக மாறி சாம்பலை அள்ளி உடல் முழுவதும் பூசிக் கொண்டு அருள் வந்து பெரும் குரல் கொடுத்தபடி ஆடி செல்வார்.

ஒவ்வொரு வீட்டு வாசலும் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

கரகம் தூக்கி வரும் ஜானகிராமன், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்பார். அவருடைய கால்களில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி நமஸ்கரித்து குடும்பத்துடன் வணங்குவார்கள்.

கரகத்தின் பின்பு பக்தி பரவசத்துடன் ஆண்களும், மாவிளக்கு சுமந்து பெண்களும் திரளாக நடந்து செல்வார்கள்.

மேலத்தெரு விநாயகர் கோவிலில் இருந்து புறப்படும் கிரகம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் சென்று அடையும் போது நாடு இரவு முடிந்துவிடும்.
கோவிலை மூன்று முறை சுற்றி வந்து ஜானகிராமனும் அவரை தொடர்ந்து வந்த கூட்டமும் நிற்க, கிரகத்தை என் தந்தை இறக்கி வைப்பார். கிரகம் இறக்கிய பிறகு, அருள் கொண்டு வானை பிளக்கும் அளவுக்கு பெரும் குரல் கொடுத்து ஓய்வார் ஜானகிராமன். அல்லது மலை ஏறுவார்.

EDDUKKUDI MURUGAN KOVIL
கிழக்கு பார்த்த மாரியம்மன் வாசலில் இருந்து, கோவில் காலை புதைக்கப்பட்ட இடம் வரை, இரு பக்கமும் மாவிளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் பெண்கள்.

கண் நோய், காது நோய், இதய நோய், கால்வலி, கை வலி, வயிற்று வலி என நோய்கள் சரியாக வேண்டும் என வேண்டிக் கொண்டவர்கள், குளித்து ஈரத்துணியுடன் படுத்திருக்க, வேண்டிக் கொண்ட இடத்தில் வாழை இலையில் மாவிளக்கு வைத்து பிடித்துக் கொள்வார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு, மாரியம்மன் நினைவாக மாரியம்மாள், மாரியப்பன் என்று பெயர் வைப்பார்கள். சிலர் முடி எடுத்து வணங்குவார்கள்.
இப்படி விடிய விடிய நடைபெறும் அந்த விழாவில் முன்னின்று செய்யும் முக்கிய மனிதர்களில் ஒருவராக இருப்பார் என் தந்தை.

மாரியம்மனுக்கு, ஆகாச மாரியம்மன் என்று பெயர். மாரி என்றால் மழை. அதுவும் ஆகாசத்தில் இருந்து கொட்டும் மழை. அந்த மழை கிராம மக்களின் வாழ்வுக்கும், விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருந்தது. அதனால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அங்குள்ள மண்ணை பிசைந்து உருட்டி அதன் மீது வேப்பிள்ளையை சொருகி, அதைத்தான் வணங்குவார்கள். முன்னோர்கள் இயற்கையை வழிப்பட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் மாரியம்மன்.

No comments:

Post a Comment