Saturday, August 3, 2019

எங்க ஊரு 'பதினெட்டாம் பேரு'


எங்க ஊரு பதினெட்டாம் பேரு

நான் பிறந்த வடசங்கந்தி கிராமம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது. அங்கு ‘ஆடி 18’ ஆம் நாளை ‘பதினெட்டாம் பேரு’ என்று கொண்டாடி மகிழ்வார்கள்.

காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து நீடாமங்கலத்திற்கு வடமேற்கில் 2.5 கி.மீ இல் மூனாறு தலைப்பு என்ற இடத்தில் வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு ஆகிய மூன்று ஆறுகள் பிரிகின்றன.

இதில் கோரையாறு என்கிற ஆறு எங்களுக்கானது. நீடாமங்கலத்தில் தொடங்கும் கோரையாறு முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அருகே வங்க கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 80 கி.மீ ஆகும். இந்த ஆறு நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் உழவு தொழில் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

முத்துப்பேட்டை அருகில் உள்ள தேவதானம் என்ற கிராமத்தில் கோரையாற்றிலிருந்து கிழக்கு நோக்கி தூக்கனாங்குருவி என்கிற சிறிய ஆறு பிரிகிறது. அந்த தூக்கனாங்குருவி ஆறு காரைக்காரன்வெளி கிராமம் அருகே ஆரியலூர், வடசங்கந்தி என இரண்டு கிராமங்களுக்கு பெரிய வாய்க்காலாக பிரிந்து செல்கிறது. அதில் பெரிய வாய்க்கால் எனப்படும் அகலமுள்ள வாய்க்காலில் எங்கள் வடசங்கந்தி கிராமத்திற்கு தண்ணீர் வரும்.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்து சேரும் போது, எங்கள் கிராமத்திற்கு அந்த ‘வாசம்’ வந்துவிடும். குப்பை அடிப்பது, குப்பைகளை கொழுத்தி விடுவது, மீ முள் செத்துவது, வயலில் கிடக்கும் மரங்களை திடலில் போடுவது என விவசாய வேலைகள் றெக்கை கட்டி பறக்கும்.

பெரிய வாய்க்காலுக்கு புதிய தண்ணீர் வரும் போது, அதை காண ஊர் மக்கள் திரண்டு செல்வார்கள். தண்ணீரை கும்பிட்டு வணங்கி வரவேற்பார்கள். நுங்கும் நுரையுமாக வெடுப்புகளில் புகுந்து அதை நிறைத்துக் கொண்டு வேகமாக முன்னேறி செல்லும் அந்த ‘புதிய தண்ணீர்’.

வெடுப்புகளில் வாழ்ந்த பூரான், தேளு போன்ற புழு பூச்சிகள் எல்லாம் எங்கு செல்வது என்று தெரியாமல் பீதியில் பயந்து அங்கும் இங்குமாக இடம் தேட ஓடும்.  

ஆறு மாதங்கள் காய்ந்து கிடந்த வாய்க்கால்கள் நீர் நிரம்பி தழும்பி கிடப்பதைப் பார்க்கும் போது மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இரவெல்லாம் தவளைகள் விடாமல் கத்தும். அதுவும் ஒரு ராகத்தோடு!

நாற்றாங்காலுக்கு தண்ணீர் வைத்து ஏர் உழுவார்கள். நிலத்தை மண்வெட்டியால் கொத்தி சமப்படுத்துவார்கள். நல்ல நாள் பார்த்து ‘சேரை’ பிரித்து ‘விதை கோட்டை’களை வெளியே எடுப்பார்கள். அவற்றை தூக்கிச்சென்று வாய்க்காலில் தள்ளி ஊற வைப்பார்கள். தண்ணீர் இழுத்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக கட்டி வைப்பார்கள்.

விதைக் கோட்டை ஒரு நாள் முழுதும் தண்ணீரில் கிடக்கும். மறு நாள் கரையில் ஏற்றி தண்ணீரை வடிய விடுவார்கள். மூன்றாம் நாள் பிரிக்கும் போது முளைவிட தயார் என்கிற நிலையில் இருக்கும். அதை நாற்றங்காலில் தெளித்து, தண்ணீர் வடிய வைப்பார்கள். மூன்றாம் நாள் பச்சை பச்சையாக வயல் முழுவதும் காட்சியளிக்கும். அதை பார்க்கும் போது பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

நான் வயசுக்கு வந்துட்டேன். கல்யாணத்துக்கு ரெடி என்று கூறுவார்களே, அதைப் போல நாற்றாங்காலில் பசுமையாக மண்டிக் கிடக்கும் நாற்றுகள் நடவு வயலுக்கு செல்ல தயார் என்கிற நிலையை அறிவிக்கும் போது, இந்த ‘பதினெட்டாம் பேரு’ வரும்.

உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொல்லி பொங்கல் விழா கொண்டாடும் விவசாயிகள், தண்ணீருக்கும் நன்றி சொல்லி வேண்டிக் கொள்ளும் விழாவாக பதினெட்டாம் பேரை கடைப்பிடித்தார்கள்.

நாட்டை தாய்நாடு என்று சொல்வது போல, ஆற்றை கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்களாம். அதனால்தான் கன்னிப் பெண்கள் கூடி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.  

புது நீர் வரும்போது கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, தாலியை மாற்றிக் கொள்ளுதல் என சில வழிபாடுகள் செய்கின்றனர். இதில் வற்றாமல் தண்ணீர் வர வேண்டும் என்கிற வேண்டுதலும் முக்கியமாக இருக்கிறது.

இந்த விழாவை கொண்டாட முதல் நாளே ஸ்பெஷலாக தண்ணீர் திறந்து விடுவார்கள். பொங்கி வரும் தண்ணீர் வாய்க்காலின் இரு கரைகளையும் இணைத்துக் கொண்டு பாயும். வெள்ள பெருக்கெடுத்து ஓடும் அந்த தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடுவது எல்லையில்லா மகிழ்ச்சியை தரும்!.

அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க, மாலை நான்கு மணிக்கு விழா என்றாலும், நாங்கள் மூன்று மணிக்கே சென்று விடுவோம். வாய்க்காலின் வடக்கு கரையில் உள்ள பூவரச மரத்தில் ஏறி வாய்க்காலின் பக்கம் நீளும் கிளைகளுக்கு தாவி சென்று கிளையிலிருந்து வாய்க்காலுக்குள் ‘தொபுக்கடீர்’ என்று குதிப்போம்.  ஒருத்தர் மேல் ஒருத்தர் குதித்து விழுவதும், ஓடி வந்து முந்திக் கொண்டு மரம் ஏறுவதும், வழுக்கி விழுவதும், மோதிக் கொள்வதும், எதிர் நீச்சல் போட்டு அடித்துக் கொள்வதும் என சுகமான விளையாட்டுகள் அங்கு நடைபெறும். .

சிலர் பாலத்தின் மேலிருந்து குத்தித்து பாலத்தின் உள்ளே சென்று வெளியில் வருவார்கள். தம் கட்டி மூச்சு பிடிப்பவர்கள்தான் அப்படி செய்ய முடியும். சாகசங்கள் நிறைந்த அந்த விளையாட்டுக்களும் அங்கு நடைபெறும்.

சரியாக மாலை நான்கு மணிக்கு பெண்கள் கூடி விடுவார்கள். பூஜை செய்ய மேற்கு பகுதியில் உள்ள ‘தச்சன்தரிசி’ என்கிற இடத்தில் வாய்க்காலின் பாலம் அருகே கிழக்கு பார்த்து வீடு கட்டுவார்கள். அதவாது அஞ்சுக்கு அஞ்சு அளவில் கட்டமாக வீடு அமையும். அதில் உள்ள நான்கு மூளைக்கும் ஒரு வட்டம் அமைத்து அதில் வேப்பில்லை, கருகமணி போன்ற பொருட்களை வைப்பார்கள்.

உள் பக்கம் சுத்தம் செய்து பசு சாணத்தால் மொழுகி கோலம் போடுவார்கள். அதன் மேல் வாழை இலையை விரித்து அதில் அகல் விளக்கு வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, சூடம், சாம்பிராணி, பழங்கள் என்று பூஜைக்கு வேண்டிய பொருட்களுடன், வெல்லம் கலந்த பச்சரிசி வைத்து வழிபடுவார்கள்.

மஞ்சள் தடவிய நூலை பெண்களுக்கு கழுத்திலும், சிறுவர்களுக்கு கையிலும் கட்டிவிட்டுவார்கள். அந்த ஆண்டு திருமணம் ஆன மணமக்கள் அங்கு புத்தாடையுடன் வந்திருந்து வணங்கி, திருமணத்து அன்று அவர்கள் அணிந்திருந்த மாலைகளை இருவரும் சேர்ந்து வாய்க்காலில் விடுவார்கள்.  அது பாய்ந்து செல்வதை கண்டு களிப்பர்.

எல்லோருக்கும் இனிப்பு கலந்த அரிசி போட்டி போட்டு வழங்குவார்கள். தனியாக வீட்டில் செய்து கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்து கொடுப்பார்கள்.

அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து, ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து.

புதிதாக வரும் தண்ணீர் தெய்வம். அதனால், அதை வணங்க வேண்டும். இரண்டாவது வரும் தண்ணீரில் குளிக்க வேண்டும் என்பார்கள்.

ஆடியில் வருவது புதுவெள்ளம், அது ஐப்பசி வரை குறுவை சாகுபடிக்கு உதவும். ஐப்பசியில் வரும் வெள்ளம் ஆபத்தானது என்பார்கள்.

இப்போது ஆடியில் தண்ணீர் வருவதும் இல்லை. ஐப்பசியில் அறுவடையும் இல்லை. இரண்டு போகம் சாகுபடி ஒரு போகம் என சுருங்கி போனது. ‘சேர்’ என்றால் என்ன? ‘கோட்டை’ என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு அடுத்த தலைமுறை மாறி விட்டது?.

அதே போல கன்னிப் பெண்கள் விழாவும், வேடிக்கையும் தண்ணீர் வராமல், குளத்திற்கு, அல்லது தங்கள் வீட்டுக்குள் வணங்குகிற அளவுக்கு சென்றுவிட்டது?.

பாலத்துக்கு அருகே இருந்த பூவரசு மரங்களும் இப்போது அங்கு காணவில்லை. செங்கல் சூளைக்குள் வெந்துவிட்டதாக சொன்னார்கள்.  
பெரியவர்கள் சொல்வது போல, “அதெல்லாம் ஒரு காலம்” என்று அன்றைய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் பசுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நினைவுகள் இந்த ஆடி பெருக்கு நாளில் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
-    ஜி.பாலன்