Monday, July 24, 2017

7. ராஜாமணியின் மரணம்

வாய்ப்பு கிடைத்திருக்கிறது வாழ்ந்து பார்க்கலாம் என்று என்னுடைய தந்தையின் பாட்டன் சொக்கலிங்கம் வாழ்ந்து பார்த்தார். தான் மட்டும் அப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, துணைக்கு சம்பந்தி, காத்த பெருமாளையும் சேர்த்துக் கொண்டார்.

மாமனாரும், தந்தையும் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தை என்னுடைய பாட்டி ராஜாமணி, கண்டிக்க முடியாமல் தவித்திருக்கிறார். வெறும் பத்துக்கும், பதினைத்துக்கும் நிலங்களை அடகு வைத்து அவர்கள் கொண்டாடியதை, அவரால் தடுக்க முடியவில்லை.

கணவர் நடேசனின் வெளிநாட்டு சம்பாத்தியத்தில், சில நிலங்களை மீட்டுப் பார்த்தார். இருந்தாலும் முடியவில்லை. 

எங்கள் ஊருக்கும் காரைக்கால் நகருக்கும் நூற்றி ஐம்பது கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தது. அப்போது பெரிதாக வாகன வசதிகள் கிடையாது. அதனால், ஒரு குதிரையை வாங்கி, அதில் காரைக்காலுக்கு சவாரி செய்து, வெளிநாட்டு சரக்கு வாங்கி வருவாரம் சொக்கலிங்கம்.

அப்படி, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அவர்கள், ஒரு கட்டத்தில் குடலும், உடலும் பாதிக்கப்பட்டு இந்த உலகை விட்டு பிரிந்துவிட்டார்கள்.

மீதம் இருந்த நிலங்களை விற்று, பெரிய மகள் வைரத்தை, பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பெருடமருதூர் கிராமத்தில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார் வெங்கிடாசலாம் என்பவரின் மகன், சோமசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார், ராஜாமணி.

இரண்டாவது மகள் விசாலாட்யை உதயமார்தாண்டபுரம் சபாபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தவர், மூன்றாவது மகள் செல்வரங்கத்தை, சிறுபனையூர் தம்புசாமி என்பவரின் மகன் சுப்பையாவுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

உடல்நிலை சரியில்லாமல் காலமான மூத்த மருமனின் பதினாறுக்கு சென்ற ராஜாமணி, அப்படியே, கையில் ஒரு குழந்தையையும், வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டிருந்த மூத்தமகள் வைரத்தை, தனது வீட்டுக்கே அழைத்து வந்தார்.

தில்லைவிளாகத்தில் வாசித்த நாத்தனார் சட்டமுத்து, தனது மூத்த மகள் வீரமாட்சியை, அதே தில்லைவிளாகத்தை சேர்ந்த வண்டுத்தேவர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த போது, தாய் மாமன் வீட்டு சீதனமாக பொன்னும், பொருளும் கொடுத்து உதவிய ராஜாமணி, சட்டமுத்துவின் இரண்டாவது மகள் முல்லையம்பாளை, கடுவெளி அருணாசலம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த போதும் உதவினார்.

இப்படி தன்னால், முடிந்த உதவிகளை உறவினர்களுக்கு செய்து வந்த ராஜாமணி, நாலு ‘வேலி’ நிலம், நாலு ‘மா’ நிலமாக சுருங்கிய போது, கண்களை மூடினார்.

கடைசி காலத்தில், தனது மகன்கள் கோபாலகிருஷ்ணன், அரிகிருஷ்ணன் இருவருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியவில்லையே என்கிற பெரிய கவலை ராஜாமணிக்கு இருந்திருக்கிறது.

‘’ஏ... கிழவி, நாலு வேலி நிலத்தை, நாலு மா நிலமாக விட்டு செல்வதாக வருத்தப்பட்டாயே, இதோ... அதே ஊரில்... உன் பேத்தி கௌசல்யா, ஏழு ‘மா’ நிலம் இருந்தவரை திருமணம் செய்து கொண்டு, ஏழு வேலி நிலத்துக்கு சொந்தக்காரியாக உயர்ந்திருக்கிறார் பாரு’’ என்று உரக்க சொல்கிறது என் மனம்.

ஆனால், ‘’அவளும் நான் தானடா’’ என்று, ராஜாமணி திருப்பி சொல்வது போல, அறிவுறுத்துகிறது அதே மனம்.

என்னுடைய பாட்டி ராஜாமணி, எப்பவும் எங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருடைய குணங்கள், எங்கள் சகோதரியிடம், எங்கள் மகளிடம், எங்கள் பேத்திகளிடம் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment