|
ஐயன் குளம் |
எனது ஊரின் பெயர் வடசங்கந்தி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எனது கிராமம்
திருத்துறைப்பூண்டி டூ பட்டுக்கோட்டை பஸ் மார்க்கத்தில் சங்கேந்தி கிராமத்தில் இறங்கி வடக்கே மூன்று கிலோ மீட்டர் வடசங்கந்தி செல்ல வேண்டும்.
120 வேலி நிலத்தில் அமைந்துள்ளது வடசங்கந்தி கிராமம். கிழக்கே குமாரபுரம் மேற்கே காரைகாரன்வெளி, தெற்கே சங்கேந்தி, வடக்கே ஆரியலூர் என நான்கு பக்கமும் நான்கு கிராமங்கள் அமைந்துள்ளது.
காவிரி ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றான வெண்ணாற்றிலிருந்து வடலாறு, வெட்டாறு, கோரையாறு, பாமணியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலிய ஆறுகள் பிரிகின்றன.
அதில் நீடாமங்கலம் அருகேயுள்ளது கோரையாறு தலைப்பு. அங்கிருந்து தட்டாங்கோவில் பிரிவில் இருந்து திரும்பும் கோரையாறு, தேவதானம் சட்ரஸ் மூலமாக எங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். பிறகு அந்த தண்ணீர் சங்கேந்திக்கும் எங்களுருக்குமாக பிரிகிறது. அது ஒட்டங்காடு கிராமம் அருகே வரும் போது, வடசங்கேந்தி, ஆரியலூர் ஆகிய இரண்டு கிராமத்துக்கும் தனி தனியாக பிரிகிறது.
வடங்கந்திக்கு பெரிய வாய்ககாலாக வரும் அந்த அந்த வாய்ககாலில் சிதம்பரத்தடி வாய்க்கால், வாரியாக்கோட்டகம் வாய்ககால், மாமரத்தடி வாய்ககால் என பிரிந்து பாசனத்துக்கு உதவுகிறது.
மேற்கே ஆளடிகன்னி, (கன்னி என்பது ஒரு ஆள் ஓடிவந்து தாண்டும் அளவுக்கு அகலம் உள்ள சிறு வாய்ககால்) கணேசபிள்ளை பங்கு இருக்கும் இடத்தில் ஒரு கன்னி, கைபுள்ள பங்கு உள்ள இடத்தில் வடகன்னி, வைத்தித்தேவர் வயலருகே உள்ள தச்சன் தரிசி கன்னி, பிள்ளையார் கட்டளை கன்னி, மாரியம்மன் கோவில் அருகே உள்ள கட்டளை கன்னி என சில சிறு வாய்க்கால்கள் பாசனத்துக்கு உதவுகின்றன.
அருணாயில கட்டளை, தச்சன்தரிசி, பிரசிடென்ட் வயல் ஏரி, செல்லையா திடல், வாரியா கோட்டகம், வண்ணான் மேடு, பிள்ளையார் கட்டளை, மாரியம்மன் கோவிலடி, கானி, ஓடை, சிதம்பரத்தடி, கிளிமூக்கு கட்டளை, ஆத்தியடி, கீழவேளி எனறு வயல் பகுதிகளை பிரித்து வைத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் குடிக்கவும், குளிக்கவும் பல குளம், குட்டைகள் பெரிதும் உதவியாக இருந்தது. மேற்கே ஐயன்குளம், கிழக்கே வளவன்குளம், சமாதி குளம், பிரசிடென்ட் வீடு பின்புறம் உள்ள பட்டாணி குளம், வீரமகாளி கோவில் குளம், பழைய வீரமாகாளி கோவில் குளம், வெள்ள குளம், நெட்டி குளம், மறத்தெருவில் உள்ள ராசாங்குளம்,
சபாபதி தேவர் வீடு பின்புறமுள்ள குட்டை, மாணிக்கம்பிள்ளை வீடு பின்புறமுள்ள குட்டை, புள்ளைமுழுங்கி குட்டை, அண்ணபூரணி குட்டை, செல்லத்துரை குட்டை, ஏரி என நிறைய இருக்கின்றன.
மூலைகடை வைத்திதேவர் வீடு பின்புறம் ஒரு குட்டை இருந்தது. அது இப்போது இல்லை. ஆனால், புதிதாக நடராசன் ஒரு குளத்தையும், மாரிநகரி தாத்தா இடத்தில் ஒரு குளமும், முருகேசன் ஒரு குளமும், சரவணன் ஒரு குளமும், வாத்தியார் சீத்தாராமன் அத்தான் ஒரு குளமும் அவரவர் இடத்தில் வெட்டி உருவாக்கி உள்ளனர்.
கணேசபிள்ளை திடல் ரெண்டு, மாரிநகரியார் திடல், கிருஷ்ணமூர்த்தி பிள்ளை திடல், வீரன் வீடு திடல், பண்டாரத்து திடல், காரைகாரன்வெளி அத்தே வயலில் உள்ள திடல், திட்டாணி திடல், சிலோன்கார் வீடு திடல், செல்லையா திடல், திட்டாணி திடல், கல்லுபெருக்கி திடல், ராவுத்தன் - அஞ்சான் வீடு அருகே உள்ள திடல், புள்ளை மழுங்கி குட்டை அருகே உள்ள திடல், சுந்தர்ராஜா வயல் கிட்டே உள்ள திடல், பழைய விரமாகாளி அம்மன் கோவில் திடல், வீரமகாளி கோவில் திடல், பரியாரி திடல், உப்பு வீரன் திடல், எலியன் திடல், கிளிமூக்கு திடல், மருந்துகடை பெரியப்பா வீடு திடல், அடைக்கப்பதேவர் திடல், தேவர் திடல் என பல திடல்கள் உள்ளன. அறுவடை காலங்களில் களம் வைக்க உதவியாக இருந்தது.
ஆரம்பத்தில் கரையோர நிலங்களில் குறுவை, தாளடி இரு போகமும், தூரத்து இடங்களில் சம்பா சாகுபடியும் செய்தார்கள். இப்போது ஒரு போகம்தான். இங்கு நெல், உளுந்து, பச்சபயிறு, பசலி போன்ற தானியங்கள் விளைகின்றன.
புளிய மரம், மா மரம், தென்ன மரம், மூங்கில் மரம், வேப்பமரம், பூவரசமரம், கிளுவை மரம், பொதிய மரம், முள்ளுமுருங்கை மரம், ஈச்சமரம், பனை மரம், விலா மரம், கருவை மரம், காட்டுகருவை மரம், கூந்தபனை என பல மரங்கள் வளர்கின்றன. அதே போல செடி, கொடி, புல், பூண்டு போன்றவைகள் நிறைந்த கிராமம் அழகான கிராமம் வடசங்கந்தி
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் ஊரிலும் முக்கிய தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர். மேலத் தெருவில் ஐயன் குளம் கரையில் அமர்ந்திருப்பவர் வினாயகர். இவரை வெள்ளந்தாங்கி வினாயகர் என்று பெயர் வைத்து அழைப்பார்கள். கிழத்தெரு கடைசியில் இருப்பது மாரியம்மன், காளியம்மன் கோவில். மாரியம்மனை ஆகாச மாரியம்மன் என்று அழைப்பார்கள்.
கிழக்கே வயல்காட்டில் வீரமாகாளி அம்மன் கோவிலும் அதன் வாசலில் கிழக்கு பார்த்து நிற்கும் வீரன் சிலையும், கொஞ்சம் தள்ளி தெற்கு பார்த்து நிற்கும் சாம்பான் சிலையும் இருக்கிறது. வடக்கே சிவன் கோவில் உள்ளது. அங்கு பெரிய லிங்கம் சிலையும் அதன் அருகில் விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் சிலை ஒன்றும் உள்ளது.
வடக்கு தெருவில் உள்ள கடைசி வீட்டின் எதிரே மாடனுக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. அங்கு உள்ள மரத்தடியில் மின்னடியானுக்கும், கழுவடையானுக்கும் படையல் செய்து வணங்குவதை பார்த்திருக்கிறேன்.
வடக்கே பெரிய வாய்க்கால் தாண்டி கூந்த பனை மரம் உள்ள இடத்தில் வேம்பையன் கோவில் உள்ளது. அங்கும் வேம்பையன் குடும்பம் வழிபட்டதாக கூறுவார்கள். தெற்கு தெருவில் மன்மத சாமிக்கு காமண்டி திருவிழா செய்வார்கள்.
பள்ளிக்கூடம் பின்னால் பழைய பட்டாமணியர் சீனிவாசராஜூ அவர்களின் நினைவாக சாமாதி கோவில் உள்ளது. அங்கு அவரது நினைவு நாளில் குருபூஜை செய்து வணங்கியதை பார்த்திருக்கிறேன். அதே போல மாரியம்மன் கோவில் எதிரே கோவில் காளை புதைத்த இடத்தில விளக்கு வைத்து வணங்குவார்கள்.
நரசிம்மராஜூ அவர்கள் வீட்டு பின்புறம் உள்ள விலாமரத்தடியில் அம்மனை வைத்து வணங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றித்திற்குள் இருக்கிறது எனது வடசங்கந்தி கிராமம், முன்பு தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது. இப்போது திருவாரூர் மாவட்டமாகிவிட்டது.
இங்கு அகமுடைய தேவர், பிள்ளை, தெலுங்கு மொழி பேசும் ராஜூ, வெள்ளாளர், நாடார், நாட்டரசர், பள்ளர் போன்ற சாதி பிரிவுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஆரம்ப காலம் தொட்டு, இன்றுவரை சாதிய பூசல்கள் இங்கு வந்ததில்லை. அனைவரும் வயலில் இறங்கி பாடுபட்டு வாழ்பவர்கள். எல்லோரும் சிறுவிவசாயிகள்தான்.
ஆரம்பத்தில் பழைய பட்டாமணியார் சீனிவாசராஜூ பெரும் நிலக்கிழாராக வாழ்ந்திருக்கிறார். அதே போல சுந்தர்ராஜூ, மங்குபதி ராஜூ, நரசிம்ம ராஜூ, கிட்டு ராஜூ, தீனதயாளுராஜூ, கமலுப்பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, கோவிந்தப்பிள்ளை, சுப்பையாத் தேவர், நாராயணதேவர், காத்தபெருமாள் தேவர், தேவர் வீடு, கணபதி நாடார், தெட்சிணாமூர்தி தந்தை சிங்காரு, ராமன், அஞ்சலை குடும்பம் போன்றவர்கள் பெரும் மிராசுதாரர்களாக இருந்தார்கள்.
தற்போதைய தகவல் படி ஆண்கள் 342, பெண்கள் 348 என மொத்தம் 690 பேர் வசிக்கின்றனர்
வடசங்கந்தி கிராமத்தின் தலைவராக முதலில் தீனதயாளு ராஜா இருந்தார். அதன் பிறகு க.உலகநாதன், கா.கோவிந்தராஜ், க.உலகநாதன், எம். சண்முகம் (கிட்டு) ஆகியோர் தலைவராக பதவி வகித்தனர். இப்போது எம். உமேஷ் பாபு தலைவராக பதவி வகித்து வருகிறார்.
(மீண்டும் சந்திப்போம்)