என்னுடைய முப்பாட்டன் பெயர் அரிகிருஷ்ணன், தந்தை சரபோஜி மன்னர் அவையில் வேலை செய்தவர். தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பெயர் சொக்கலிங்கம்.
மன்னார்குடி தாலுக்கா கெழுவத்தூர் கிராமத்தில் வளர்ந்த சொக்கலிங்கம், செந்தாமரைக்கண் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்.
சொக்கலிங்கத்தை எல்லோரும் சொக்கப்பன் என்றுதான் அழைப்பார்களாம். அதனால்தான், என்னை சொக்கப்பன் பரம்பரை என்றே இப்பவும் சிலர் அழைப்பார்கள்.
சொக்கப்பன் என்கிற இந்த சொக்கலிங்கத்திற்கு நடேசன், ராவுத்தன் என இரண்டு மகன்கள். சட்டமுத்து என்கிற ஒரு மகள்.
மகள் சட்டமுத்துவை தில்லைவிளாகம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.
மூத்த மகன் நடேசனுக்கு பெண் தேடினார்.
திருத்துறைப்பூண்டி தாலுக்கா வடசங்கந்தி கிராமத்தில் காத்தபெருமாள், நாராயணன் என இரண்டு பெரிய மிராசுகள். இருவரும் ஒருதாய் மக்கள். காத்த பெருமாளுக்கு ராஜமணி என்கிற மகள், நாராயணணுக்கு மீனாட்சி என்கிற மகள்.
ஆண் வாரிசு இல்லாத இவர்களுக்கு, மருமகன்கள் - மறு மகனாக வேண்டும் என்கிற நிலை. இதனால், வீட்டோடு இருக்கிற மாதிரியான நல்ல மாப்பிள்ளைகளை தேடினார்கள்.
எனது தாத்தா நடேசனின் அருமை, பெருமை, திறமை அறிந்து, எனது ஆத்தா ராஜாமணியை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார் அவரது அப்பா மிராசு காத்தபெருமாள்.
நாலு வேலி நிலமும் பெரிய ஓட்டு வீடும் உள்ள வடசங்கந்தி கிராமத்திற்கு மருமகனாக வந்தார் நடேசன்.
மகன் நடேசன், பெரிய மிராசுதார் மருகனாக சென்றதால், சொக்கப்பனும், அவரது இளைய மகன் ராவுத்தனும் கூட வடசங்கந்தி கிராமத்திற்கே வந்து விடுகின்றனர்.
வடசங்கந்தி பக்கிரித்தேவரின் அத்தையை, இளைய மகன் ராவுத்தனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சொக்கப்பன்.
நடேசன், ராஜாமணி தம்பதிக்கு முதலில் பிறந்தது மூன்றுமே பெண் பிள்ளைகள். அதனால், அடுத்து ஆண் வாரிசு பிறக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு, அந்த நம்பிக்கையை உண்மையாக்கி பிறந்தவர், எனது தந்தை கோபாலகிருஷ்ணன்.
பிறக்கும் போதே அவரை ஒரு தங்க தட்டில் ஏந்தி வாங்கியதாக ஒரு தகவல் உண்டு. அதன் பிறகு எனது சித்தப்பா அரிகிருஷ்ணன் பிறந்திருக்கிறார்.
சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சொக்கப்பன், சொத்துக்களை பத்துக்களாக மற்ற காரணமானார். பொண்ணு கொடுத்த சம்பந்தி காத்த பெருமாளையும் குடிக்க வைத்து, வாழ்க்கை பாதையை போதைக்கு திருப்பிவிட்டார்.
சீமை சரக்கு வாங்குவதற்காக நூறு மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள காரைக்காலுக்கு ஒரு குதிரையில் சென்று வருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சம்பந்திகள் நிலத்தை அடகு வைத்து அடகு வைத்து குடிக்க, என் தாத்தா நடேசன் வெளிநாடு சென்று சம்பாத்தித்து அந்த நிலங்களை திருப்புவாராம்.
இவர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை. அவர் வெளிநாடு செல்வதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் சம்பந்திகள் இருவரின் உயிரையும் அந்த குடி, குடித்துவிட்டது.
அப்போது நாலு வேலி நிலமும் நாலுமா நிலமாக மாறிப் போனது.
நிலங்களை யார் யாருக்கெல்லாம் விற்றார்கள் என்கிற பத்திரங்கள் மட்டும் ஒரு காக்கி உரையில் போட்டு பத்திரமாக வைத்திருந்தார்கள்.
பாட்டன் சொத்து பேரனுக்கு என்பார்கள். இங்கு சொத்துக்கு பதில், நிலம் விற்ற பத்திரங்கள்?
பாட்டன் ஞாபகமாக இது மட்டும் எதற்கு என்று, கோபத்தில் ஒரு நாள் அந்த பத்திரங்களை கிழித்து எறிந்தார் எனது அண்ணன்.