Monday, July 24, 2017

5. வேலைக்கு அழைத்தவரை விரட்டி அடித்த ராஜாமணி.

வடசங்கந்தி கிராமத்தின் மேல தெருவில், ஐயன் குலத்திற்கு தென் மேற்கு பகுதியில் உள்ள திடலில் ஒரு பெரிய வீடும், அதனை சுற்றி நிலங்களுடன் வசித்து வந்தார் என் பாட்டி ராஜாமணி.

வீட்டை சுற்றி நான்கு பக்கமும் வேளிகள் இருந்தாலும், நான்கரை வேலி நிலத்துக்கு சொந்தக்காரியாக இருந்தார் ராஜாமணி. ஒரு வேலி என்பது ஏழரை ஏக்கர் நிலம்.

வைரம், விசாலாட்சி ஆகிய மகள்களுக்கு பிறகு எனது தந்தை கோபாலகிருஷ்ணன், எனது சித்தப்பா அரிகிருஷ்ணன், எனது சின்ன அத்தை செல்வரங்கம் ஆகிய ஐந்து பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்த ராஜாமணி, தனது பிள்ளைகளை செல்வ செழிப்பில் செல்லமாக வளர்த்திருக்கிறார்.

மூன்றாம் வகுப்பு வரை படித்த என் தந்தை, அதற்கு மேல் படிக்க செல்லவில்லை என்றால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீட்டை சுற்றி நிலம் இருக்கும் போது, தனது பிள்ளைகள் அடுத்தவர்களிடம் கை கட்டி நின்னு வேலை பார்க்கவா போகிறார்கள் என்கிற எண்ணம்.

மத்திய அரசுசின், ரயில்வே வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி எனது தந்தையையும், எனது சித்தப்பாவையும் அழைக்க வந்தவரை, ‘’எம் புள்ளைங்களையா வேலைக்கு கூப்பிடுறே’’ என்று அவரை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்.

என்னுடைய தந்தையின் சித்தப்பா மகன் வைரப்பன், வெளிநாடு சென்று வேலை பார்த்த போது, தனது தம்பிகளையும் தன்னுடன் வேலை பார்க்க ஆசைப்பட்டு விசா எடுத்து அனுப்பி இருக்கிறார். 

என் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறார் ராஜாமணி.

மூத்த மகள் வைரத்தை பெருடமருதூர் வெங்கிடாசலம் மகன் சோமசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

இரண்டாவது மகள் விசாலாட்சியை உதயமார்தாண்டபுரம் சபாபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

மூன்றாவது மகள் செலவரங்கத்தை சிறுபனையூர் தம்புசாமி மகன் சுப்பையா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

மூத்த மகள் வைரத்தின் கணவர் சோமசுந்தரம், மாரடைப்பால் காலமாக, அடுத்த ஊரில் எனது மகள் இருக்க கூடாது என்று, கையில் ஒரு குழந்தையுடனும், வயிற்றில் ஒரு குழந்தையுடனும் இருந்த வைரத்தை ஊருக்கே அழைத்து வந்திருக்கிறார், ராஜாமணி.

இப்படி பெரிய குடும்பமாக நாலு வேலி நிலமும், நாலு திடலுடனும் வசித்த என் பாட்டி ராஜாமணி, கடைசி காலத்தில், நில மற்றவளாக, ஏழ்மையை அனுபவித்து இறந்திருக்கிறார்

No comments:

Post a Comment