Sunday, July 30, 2017

11. என் தந்தையின் மனதுக்குள் புதைந்த அந்த நினைவுகள்

என் தந்தையை திருமணம் செய்து கொண்டு வடசங்கந்தி கிராமத்திற்கு வந்தார் என் அம்மா.
ஐயன்குளத்தின் தென் மேற்கே, நான்கு பக்கமும் வயல்கள் சூழ்ந்திருக்க, நடுவே அமைந்துள்ள ஒரு பெரிய திடல். அங்கு தனித்திருக்கும் ஒரு பெரிய வீடு. அந்த ஒத்த வீட்டில் படுக்கையில் கிடந்த மாமனார் நடேசன், வைரத்தின் மகன்கள் கோவிந்தராஜ், செல்லப்பா, கொழுந்தன் அரிகிருஷ்ணன் என்று, ஒரு பெரும் கூட்டம் இருந்தது.
ஐயன்குளத்திற்கு வடக்கு பக்கம் உள்ள தெருவில் கணவரின் சித்தப்பா மகன்கள் வைரப்பன், அரிகிருஷ்ணன் இருவரின் குடும்பங்களும், அதன் பக்கத்தில் கணவரின் தாத்தா, சொக்கப்பனின் கொழுந்தியாள் மகன்கள் என ஒரு பெரும் கூட்டம் தெருவை அடைத்து தனிதனியாக இருந்தார்கள்.
மாரிநகரி கிராமத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மாரிநகரியிலும், வடசங்கந்தியிலும் மாறி மாறி வசித்து வந்தார் சின்ன மாமியார் மீனாட்சி சுந்தரம். பெரும் நிலக்கிழரான அவரிடம் மனியம் பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாளடைவில் ஒதியடிக்காடு கிராமத்தில் வசித்த தன் குடும்பத்தையும் வடசங்கந்தி கிராமத்திற்கே அழைத்து வந்தார்.
வடிவேலுவின் மனைவி வள்ளியம்மை, என்னுடைய அம்மாவின் பெரிய சித்தி. அவருக்கு வைத்தியலிங்கம், பக்கிரிசாமி, சுப்பிரமணியன் என மூன்று மகன்களும், மருதாம்பாள் என்கிற ஒரு மகளும் இருந்தார்கள்.
புதிய கிராமம், புதிய மனிதர்கள் என எல்லோரும் புதியவர்களாக இருந்தாலும், அங்கு சித்தி வள்ளியம்மையும், தங்கை, தம்பிகள் இருந்ததும் அம்மாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
எதிர்ப்பார்த்த மாதிரி யாருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து செல்கிறோம். தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பொன்னும், பொருளும் இருந்தாலும், காலம் அந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில்லை.
அப்படித்தான் என் தந்தைக்கும் காலம் வேடிக்கை காட்டியது. தனது அத்தை மகள் செண்பகத்தை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார், என் தந்தை. தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று, தனது கணவர் அருணாசலத்துக்கு தங்கை செண்பகத்தையும் திருமணம் செய்து கொண்டார் முல்லையம்பாள். அதனால், அப்பா ஆசைப்பட்டது அவரது மனதுக்குள்ளேயே புதைந்து போனது.
செண்பகம் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கிட்டதட்ட ஒரு சன்னியாசியாகவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். நாம் நினைப்பது போல எல்லாம் அமைவதில்லையே.
அவரது அந்த விரதத்தையும் உடைத்திருக்கிறது, அவரது சின்ன அக்காள் விசாலாட்சியின் பாசம். முப்பத்தி ஐந்து வயது வரை சன்னியாசி போல காலத்தை கடத்தியவர், அக்காவின் பாசத்திற்கு முன்பு தோற்றுப் போனார்.
பெரிய அக்கா மகன்கள் தம்முடன் இருப்பதால், தனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதக்காம மறுத்தவரை, பாசத்தால் அதட்டி, மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார், விசாலாட்சி.
அக்கா விசாலாட்சியின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து திருமணத்திற்கு சம்மதித்தார் என்னுடைய தந்தை. என் அம்மா அவருக்கு மனைவியாக கிடைத்தார்.

No comments:

Post a Comment