Sunday, July 30, 2017

10. என் தந்தைக்கு பெண் பார்த்த அத்தை

உதயமார்தாண்டபுரம் கிராமத்தில் வசித்த வேம்பையன் என்பவருக்கு பக்கிரிசாமி, மாரிமுத்து என இருமகன்கள்.

பக்கிரிசாமியின் முதல் மனைவி திடீர் என்று காலமானதால், அவரது மகன் கோவிந்தசாமி, மகள் மீனாட்சியை வளர்க்க என்னுடைய அம்மாவின் அம்மா, அதாவது என் ஆத்தாள் வைரக்கண்ணுவை திருமணம் செய்து கொண்டார் பக்கிரிசாமி.

கோவிந்தசாமியையும், மீனாட்சியையும் தான் பிள்ளைகள் போல வளர்த்த வைரக்கண்ணுவுக்கு, சர்க்கரை என்கிற மகனையும், நாகரத்தினம் என்கிற மகளையும் பரிசாக தந்தார் பக்கிரிசாமி.

ஆனால், நான்கு குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்க இவருக்கும் கொடுப்பனை இல்லை. திடீர் என ஒரு நாள் வைரக்கண்ணுவும் இறந்துவிட அதிர்ந்து போனார் பக்கிரிசாமி.

இரண்டு மனைவி வந்தும் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். அப்போதெல்லாம் பல தாரா திருமணங்கள் இருந்த காலம். ஆனால், மூன்றாவதாக வாழ்க்கை அமைத்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. இரண்டு மனைவிகள் மீதும் கொண்ட அவரது பாசம் அதனை தடுத்தது. அதனால், அவர்களை நினைத்து வாழ்ந்தவர், திடீர் என ஒரு நாள் அவரும் அவர்களிடம் போய் சேர்ந்தார்.

பக்கிரிசாமியின் முதல் மனைவிக்கு பிறந்த கோவிந்தசாமி, மீனாட்சி, இரண்டாவது மனைவி வைரக்கண்ணுவுக்கு பிறந்த சர்க்கரை, நாகரத்தினம் ஆகியோர் சிறுவயதிலே பெற்றோரை இழந்து நின்றனர்.

தங்கையின் மக்கள் அனாதைகளாக இருப்பதாக கருதிய வைரக்கண்ணுவின் சகோதரி முத்துலட்சுமி, தன்னுடன் நால்வரையும் அழைத்து செல்ல விரும்பினார். அதற்கு பக்கிரிசாமியின் சகோதரர் மாரிமுத்து சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது மகன் ராமசாமி மீது காட்டும் பாசத்திற்கு குறைவில்லாமல் அவர்களிடமும் பாசத்துடன் இருப்பேன் என்று உறுதி கூறினார்.

அவருடைய பாசத்துக்கு முன்னாள் தோற்று போன முத்துலட்சுமி, கடைக்குட்டி நாகரத்தினம் ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறாள். அவளை மட்டுமாவது என்னுடன் அனுப்பி வைய்யுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு வழியாக அவரை வேப்பஞ்சேரி அழைத்து செல்ல அனுமதி அளித்தார் மாரிமுத்து.

நாகரத்தினம் சிறு வயதிலேயே அழகாக இருப்பார். பார்க்க ஐயர் வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் என்பதால், அவரை எல்லோரும் பாப்பாத்தி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.

தாய் வழியில் நாகரத்தினத்திற்கு, முத்துலட்சுமி என்கிற பெரியம்மாள், வள்ளியம்மாள், பொன்னம்மாள், ஜானகியம்மாள், செல்லம்மாள் என நான்கு சித்திகள், வைத்தியலிங்கம் என்கிற மாமா இருந்தனர். இவர்கள் எல்லாம் வாய்மேடு மாணிக்கத்தின் வாரிசுகள்.

பெரியம்மாள் முத்துலட்சுமியின் மகன் சுப்பிரமணியன், மகள் முல்லையம்பாள், சித்திகள் வள்ளியம்மாள், பொன்னம்மாள், ஜானகியம்மாள், செல்லம்மாள் ஆகியோருடன் வளர்ந்தார் பாப்பாத்தி என்கிற நாகரத்தினம்.

சகோதர்கள், சகோதரியை பார்க்க அவ்வப்போது தனது உதயமார்தாண்டபுரம் கிராமத்திற்கு செல்வார் பாப்பாத்தி. காலம் உருண்டது. சிரியவர்கள் பெரியவர்கள் ஆனார்கள்.

சகோதரி மீனாட்சியை மேலப்பெருமழை காசிநாதான் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு வேதவள்ளி, பாஞ்சாலி என இரண்டு மகளும், அய்யம்பெருமாள், மாரிமுத்து, துரைராஜ் என மூன்று மகன்களும் பிறந்தனர்.

தில்லைவிளாகம் சாரதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோவிந்தசாமி. இவர்களுக்கு கமலா, அமுதா என இரு மகள்களும், மணியன், மாரிமுத்து, ராஜேந்திரன் என மூன்று மகன்களும் பிறந்தனர்.

சர்க்கரை, தனது சகோதரர் கோவிந்தசாமி, முதல் பங்காளி ராமசாமி, இரண்டாம் பங்காளி சுப்பையாவின் மகன் வேம்பையன் ஆகிய மூவர் வீட்டிலும் செல்லமாக வளர்ந்தார். இதில் வேம்பையன் உதயமார்தாண்டபுரம் கிராமத்தின் தலைவராக இருந்தார்.

தங்களை பார்க்க வரும் சகோதரி பாப்பாத்தியை அதே ஊரில் வசித்த உறவினர் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால், பாப்பாத்தியின் பெரியம்மாள் முத்துலட்சுமி அதற்கு உடன்படவில்லை.

இந்த தகவல் அதே ஊரில் வசித்த என்னுடைய அத்தை விசாலாட்சிக்கு தெரிய வந்தது. பாப்பாத்தி சின்ன பெண். இவளைப் போய் வயதான அவருக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தீர்கள் என்று வருத்தப்பட்டவர், பிறகு என்னுடைய தம்பிக்கு திருமணம் செய்து தருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

இது பாப்பாத்தியின் பெரியம்மாளுக்கு பிடித்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய தந்தை கோபாலகிருஷ்ணனுக்கு பாப்பாத்தியை திருமணம் செய்து வைத்தனர்.

உதயமார்தாண்டபுரத்தில் பிறந்து, வேப்பஞ்சேரியில் வளர்ந்து, வடசங்கந்தி கிராமத்திற்கு மருமகளாக வந்தார் என்னுடைய தாய்.

No comments:

Post a Comment