Friday, August 4, 2017

14. வீரமாகாளி அம்மான் கோவில் திருவிழா.

வடசங்கந்தி கிராமத்தின் கிழக்கே மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், வயல் காட்டில் அமைந்துள்ளது வீரமாகாளி அம்மன் கோவில். 

வடக்கு பார்த்து வீரமாகாளி அம்மன் கோவில், அதன் அருகில் கிழக்கு பார்த்து வீரன் கோவில், தூரத்தில் குளக்கரை ஓரம் தெற்கு பார்த்து சாம்பான் சிலை. 

வீரமாகாளி அம்மனுக்கு நிறைய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை அரசு அங்குள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு கொடுத்து, ‘மா’வுக்கு நாலு கலம்(அரை மூட்டை, அல்லது பனிரெண்டு மரக்கால்) நெல் அளந்தார்கள். 

ஆடி மாதத்தில் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை என்று எப்பவும் வெள்ளாமை, விவசாயம் என்று விவசாயிகள் வயலுடன் சேர்ந்து வாழ்வார்கள். 

உழைத்து களைத்தவர்கள், கலைகள் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். அதற்கு கோவில் திருவிழா பெரும் வாய்ப்பாக அமையும்.

திருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுவார்கள். மறு நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு, தினமும் இரவு தெருவுக்கு அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். ஒவ்வொரு வீட்டிலும் காத்திருந்து, பூ, பழம் வைத்து, தேங்காய் உடைத்து வணங்குவார்கள். 

வடக்கு தெருவில் கடைசி வீட்டில் ஆரம்பித்து, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு என எல்லா இடங்களுக்கு செல்லும் அம்மன் உலா, பொழுது விடியும் போது, கோவிலை சென்றடையும். 

அங்கு வழிபாடுகள் முடிந்த பிறகு, பிரசாதம் வழங்குவார்கள். அது இரண்டு கைகளாலும் பிடிக்க கூடிய அளவுக்கு பெரிதாக இருக்கும். அதை கடித்து, கடித்து திண்பவர்களை பார்க்கும் போது அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். 

கோவிலுக்கு ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் மட்டுமே வருவார்கள். பெண்கள் வந்ததில்லை. பெண்கள் தெருவுடன் இருந்து விடுவார்கள். அதே போல தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கும் சென்றதில்லை. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாண்டகபடி காரர்கள் போட்டி போட்டு செய்வார்கள். முதல் மண்டகப்படி ராமசந்திர ராஜுவின் மகன் சுந்தர்ராஜு, இரண்டாவது மண்டகப்படி சீனிவாசராஜுவின் மகன் முத்தழகிரி ராஜு, மூன்றாவது மண்டகப்படி மாணிக்கம் பிள்ளை வகையறா, நான்காவது மண்டகப்படி உலகநாதன் வகையறா, ஐந்தாவது மண்டகப்படி மரத்தெரு காத்தமுத்து, வீரையன் வகையறா என ஒவ்வொரு குழும் பெரிய அளவில் செலவு செய்து கொண்டாடுவார்கள். 

ஒவ்வொரு நாள் இரவிலும் அவரவர் குழு பொருளாதாரத்திற்கு ஏற்ப, பாட்டு கச்சேரி, கரகாட்டம் என தூள் கிளப்புவார்கள். 

கடைசி நாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் நாள். 

அன்று பகலில் அம்மன் வீதி உலா வருவார். பிரமிக்கிற வகையில் மலர்களால் ஜோடித்து, பொன் நகைகள் பூட்டி அழைத்து செல்வார்கள். ஆரம்பத்தில் ஆரியலூர் கிராம மக்கள் வழிபட வசதியாக அழைத்து செல்வார்கள். 

அங்கிருந்து வடசங்கந்தி கிராம விவசாய சாகுபடிக்கு வாய்க்கால் பிரிந்து, அதிலிருந்து தண்ணீர் வருவதால், அதை அம்மன் பிறந்த இடமாக குறிப்பிடுவார்கள். பிறகு வடக்கு தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு, குமாரபுரம் மக்கள் வழிபடுவதற்காக அந்த ஊர் எல்லை வரை கொண்டு செல்வார்கள். 

அன்று வீட்டுக்கு வீடு கொண்டாட்டமாக இருக்கும். உறவினர்கள் தங்களுடைய உறவு முறையுள்ள வயதொத்த மாமன் மகன்கள், அத்தை மகன்கள் மீது மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவார்கள். அது பார்க்க வேடிக்கையாக இருக்கும். 

அண்டா நிறைய நிறைந்து இருந்த மஞ்சள் தண்ணீர் காலியாகும் போது, அவர்கள் மனம் பூரிப்பில் இருக்கும். அதை அம்மன் பார்த்துக் மகிழ்வதாக கருதினார்கள். 

வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா முடிந்த பிறகு காப்பு விளக்கி, அதன் தொடர்சியாக மாரியம்மன் கோவிலில் விழா நடைபெறும். பகலில் காஞ்சி காய்ச்சி வழங்குவார்கள். அதற்காக பிரத்யேகமாக பனை ஓலையில் பாத்திரம் மடித்து அதில் ஊற்றுவார்கள். 

கிராமத்தில் வாழும் அத்தனை பேரும் கஞ்சி குடிக்க ஆர்வம் காட்டுவார்கள். அதை நோய் தீர்க்கும் மருந்தாக நினைத்தார்கள். அம்மன் குறை ஆகிவிடும் என்று நேரில் வந்து குடிப்பார்கள். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு வாளிகளில் கஞ்சி எடுத்து செல்வார்கள். 

தொடர்ந்து மூன்று நாள் இரவு, புதுக்கோட்டை முஸ்தபா குழுவினரின் நாடகம் நடைபெறும். முதல் நாள் வள்ளி திருமணம், இரண்டாவது நாள் பவளக்கொடி, மூன்றாவது நாள் அரிச்சந்திர மயான கண்டம் ஆகிய நாடகங்கள் நடைபெறும். நம்பி வரும் கலைஞர்களை விருந்து வைத்து கௌரவிப்பார்கள். 

கோவில் திருவிழாவை முன்னிட்டு வண்ண பலூன்கள், கருப்பு கண்ணாடி, கடிகாரம், புல்லாங்குழல், பீப்பி என பல விளையாட்டு பொருட்களும், சவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என பல திண்பண்டங்களும் விற்பனை செய்வார்கள். 

கோவில் திருவிழாவை நம்பி வரும் சிறு வியாபாரிகள் பலன் அடைய வேண்டும் என்றும், குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்றும் பொருட்களை போட்டி போட்டு வசதிக்கேற்ப வாங்குவார்கள். 

குலுக்கல் கொட்டை கடை, சீட்டு விளையாட்டு என்று ஒரு பக்கம் சிலர் பணத்தை விரயம் செய்து மகிழ்ச்சி அடைவார்கள். 

திமிறிக் கொண்டு ஓடும் பிள்ளைகளை, கை பிடித்து பத்திரமாக அழைத்து செல்லும் தாய், தங்கைகளின் பாசத்தின் வெளிப்பாடுகளை அங்கு நிறைய பார்க்கலாம். அந்த அனுபவங்களை அடுக்கி சொல்லிக் கொண்டே போகலாம். 

கோவில் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்க காரணமாக இருந்த மண்டகப்படி காரர்களை, மாலை அணிவித்து மேள தாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்து கௌரவிப்பார்கள். 

இப்போதெல்லாம், வண்டி வைத்து ஜெனெரட்டார் வசதியுடன் அம்மனை கொண்டு வருவதை பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்தில் தலையில் தூக்கி வந்திருக்கிறார்கள். அப்படி தலையில் சுமந்து வந்தவர்களில் என்னுடைய தந்தையும் ஒருவராக இருந்திருக்கிறார்.

13. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட என்னுடைய தந்தை.

VADASANGANTHI VINAYAGAR
சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என் தந்தை.

தகடூர் கிராமத்தில் அமைந்துள்ள வைரவர், குல தெய்வம். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வணங்கி வருபவர், மாதத்திற்கு ஒரு முறை எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவார்.

எட்டுக்குடி முருகன் மீது உள்ள பக்தியால் என்னுடை அண்ணனுக்கு சண்முகசுந்தரம், எனக்கு பாலசுப்பிரமணியன், தம்பிக்கு நமசிவாயம், அக்காள் மகனுக்கு குமரவேலன் என் பெயர் வைத்தார்.

வடசங்கந்தி கிராமத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன், வீரமாகாளியம்மன், ஆகிய கடவுளர்களிடம் உரிமையுடன் பேசுவார் பழகுவார். அவர்கள் மீது நம்பிக்கை அதிகம்.

அவர் உயிரோடு இருந்தவரை சிவன் கோவிலில் இருக்கும் முருகனுக்கு கார்த்திகை திருநாளில் அர்சனைக்கும், அபிஷேகத்திற்கு கொடுப்பார்.
குளத்தில் குளித்துவிட்டு வரும் போதே வெள்ளந்தாங்கி விநாயகரை வணங்குவார்.

கோவில் திருவிழா என்றால், சிவன்ராத்திரி அன்று மாரியம்மன் கோவிலுக்கு, விநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து செல்வது வழக்கம்.

அன்று கிராமமே பக்தியோடு திரண்டு நிற்கும், வடசங்கந்தி கிராமத்தில் வசித்து வெளி ஊரில் இருப்பவர்கள், வடசங்கந்தி கிராமத்தில் பெண் கொடுத்தவர்கள், பெண் எடுத்தவர்கள் என பல விருந்தினர் அந்த விழாவில் பங்கேற்பார்கள்.

THAKATUR BAIRAVAR
இரவு ஒன்பது மணிக்கு விநாயகர் கோவில் வாசலில் அமர்ந்து கரகம் ஜோடிப்பார்கள். என்னுடைய தந்தைக்கு சாமி அருள் வரவழைத்து, அவர் குரல் கொடுத்த பிறகு, என்னுடைய அத்தை மகன் ஜானகிராமனுக்கு சாமி வரும்.
அவர் அருள் வந்து ஆடுவார். அவரை பிடித்து மடக்கி, அவருக்கு சாமி உடை அணிந்து மாலைகள் அணிவிப்பார்கள். என் தந்தை கரகத்தை தூக்கி அவர் தலை மீது வைப்பார்.

கரகத்திற்கு முன்பு பறையடித்தபடி சிலர் நடப்பார்கள். கரகத்திற்கு வழி அமைத்து கொடுத்து அழைத்து செல்வது போல, வடிவேலு சாம்பான் கடவுளாக மாறி சாம்பலை அள்ளி உடல் முழுவதும் பூசிக் கொண்டு அருள் வந்து பெரும் குரல் கொடுத்தபடி ஆடி செல்வார்.

ஒவ்வொரு வீட்டு வாசலும் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

கரகம் தூக்கி வரும் ஜானகிராமன், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்பார். அவருடைய கால்களில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி நமஸ்கரித்து குடும்பத்துடன் வணங்குவார்கள்.

கரகத்தின் பின்பு பக்தி பரவசத்துடன் ஆண்களும், மாவிளக்கு சுமந்து பெண்களும் திரளாக நடந்து செல்வார்கள்.

மேலத்தெரு விநாயகர் கோவிலில் இருந்து புறப்படும் கிரகம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் சென்று அடையும் போது நாடு இரவு முடிந்துவிடும்.
கோவிலை மூன்று முறை சுற்றி வந்து ஜானகிராமனும் அவரை தொடர்ந்து வந்த கூட்டமும் நிற்க, கிரகத்தை என் தந்தை இறக்கி வைப்பார். கிரகம் இறக்கிய பிறகு, அருள் கொண்டு வானை பிளக்கும் அளவுக்கு பெரும் குரல் கொடுத்து ஓய்வார் ஜானகிராமன். அல்லது மலை ஏறுவார்.

EDDUKKUDI MURUGAN KOVIL
கிழக்கு பார்த்த மாரியம்மன் வாசலில் இருந்து, கோவில் காலை புதைக்கப்பட்ட இடம் வரை, இரு பக்கமும் மாவிளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் பெண்கள்.

கண் நோய், காது நோய், இதய நோய், கால்வலி, கை வலி, வயிற்று வலி என நோய்கள் சரியாக வேண்டும் என வேண்டிக் கொண்டவர்கள், குளித்து ஈரத்துணியுடன் படுத்திருக்க, வேண்டிக் கொண்ட இடத்தில் வாழை இலையில் மாவிளக்கு வைத்து பிடித்துக் கொள்வார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு, மாரியம்மன் நினைவாக மாரியம்மாள், மாரியப்பன் என்று பெயர் வைப்பார்கள். சிலர் முடி எடுத்து வணங்குவார்கள்.
இப்படி விடிய விடிய நடைபெறும் அந்த விழாவில் முன்னின்று செய்யும் முக்கிய மனிதர்களில் ஒருவராக இருப்பார் என் தந்தை.

மாரியம்மனுக்கு, ஆகாச மாரியம்மன் என்று பெயர். மாரி என்றால் மழை. அதுவும் ஆகாசத்தில் இருந்து கொட்டும் மழை. அந்த மழை கிராம மக்களின் வாழ்வுக்கும், விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருந்தது. அதனால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அங்குள்ள மண்ணை பிசைந்து உருட்டி அதன் மீது வேப்பிள்ளையை சொருகி, அதைத்தான் வணங்குவார்கள். முன்னோர்கள் இயற்கையை வழிப்பட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் மாரியம்மன்.